காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கைவாசலை சேர்ந்தவர் சக்தி முருகன். இவருடைய மனைவி தீபா. இருவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் சாஃப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கிருத்திக் என பெயர் வைத்துள்ளனர். இதனால் குழந்தையை சென்னையில் உள்ள தாத்தா, பாட்டியிடம் காண்பிக்க இரண்டு மாத விடுப்பில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
மெல்போர்ன் நகரிலிருந்து விமானம் மூலம் மலேசியா வந்தடைந்த அவர்கள் மீண்டும் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தை தீபாவின் தோளில் தூங்கியவாறு இருந்துள்ளது.
விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டு வெளியே வந்த வரைக்கும் குழந்தையிடம் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் சந்தேகித்த தம்பதியினர் குழந்தையை சோதித்து பார்த்தனர். அப்போது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.